Friday, December 28, 2007

மொழிநூல் (Philology) முடிவு

மனித நாகரிகத்தின் பழமைபற்றிய செய்திகளை ஆராய்ந்து முடிவுகட்டும் வகையில் பல அறிவியற் பகுதிகள் நமக்குப் பயன்படுகின்றன. ஆயினும், முதன் முதலாக அத்துறையில் வழிகாட்டியாய் நின்றது மொழியியல் என்றே கூறவேண்டும்.

உலகிலுள்ள பல மொழிகளையும் பயின்று ஆராய்ந்து அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகள் மூலம் அவற்றைக் கோவைப்படுத்துவது மொழியியலார் போக்கு. அங்ஙனம் செய்தோர் பலரும், உலகில் தென் இந்தியா தொடங்கிப் பல பக்கங்களிலும் நெடுந்தொலை பரந்து கிடக்கும் மொழிக்கோவைகள் (Language Families) பல உள்ளன என்று கண்டனர்.

அவற்றுள் ஒன்று தென் இந்தியா முதல் இங்கிலாந்து நாட்டிலுள்ள வேல்ஸ்வரை ஒரே கோவையாய்க் கிடக்கின்றது; இக்கோவையை அறிஞர் ஆரிய இனம் என்றனர்.

இவ்வாராய்ச்சியை யொட்டிப் பலர் மனித நாகரிகம் அவ் ஆரிய இனத்தார் முதலில் இருந்த இடத்திலிருந்து ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் சென்று பரந்தது எனக் கொண்டனர். ஆரியர் முதலிடமும் இதற்கேற்ப நடு ஆசியா (Central Asia) அல்லது தென் உருசியா (Southern Russia) என்று கொள்ளப்பட்டது.

பாலகங்காதர திலகர் என்னும் வரலாற்றறிஞர், "மனிதர் முதலிடம் நடு ஆசியாவுமன்று; தென் உருசியாவுமன்று. வடதுருவப் பகுதியே(North Pole)," என்று பல சான்றுகளுடன் காட்டினர்.

இக்கொள்கை ஆரிய இனத்தைப் பற்றிய வரையில் ஒவ்வுமாயினும், மனித நாகரிகத்தின் தொடக்கத்திற்குப் பயன்படாததாயிற்று. ஏனெனில், ஆரிய இனத்தார் வந்த இட்ங்கள் பலவற்றுள் அவரினும் உயர்ந்த நாகரிகமுடைய மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பது தெளிவாகக் காணப்படுகின்றது.

கிரேக்க நாட்டில் முகைனிய (Mycaenina) நாகரிகமும் ஐகய (Aegean) நாகரிகமும் கி.மு. 3000 ஆண்டு முதல் மேலோங்கியிருந்தன. இந்தியாவில் திராவிட நாகரிகத்தின் சிறப்பை வான்மீகியார் இராமாயணமும், இருக்கு வேத உரைகளும் ஏற்கின்றன.

ஆரிய இனக்கோவையேயன்றி வேறு பல மொழிக் கோவைகளும் தென் இந்தியாவரை எட்டுகின்றன என்று மேலே கூறினோம். எனவே, நாகரிகம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஏன் சென்றிருக்கக் கூடாது என்பதும் ஆராயத்தக்க தொன்றாகும்.

மொழியியல் ஆராய்ச்சி, இத்தகையதொரு கொள்கையை எழுப்பப் போதியதாயினும் அதன் உண்மையை நிலைநாட்டப் போதிய சான்றுகளை உடையதன்று. மேலும், மொழிக்கோவைகளின் போக்கால் மொழித் தொடர்பு இருக்கிறது என்று மட்டும் சொல்ல முடியுமேயன்றி, அத்தொடர்பின் போக்குத் தெற்கினின்று வடக்கு நோக்கியதா, வடக்கு நின்றும் தெற்கு நோக்கியதா என்பதை வரையறுக்க முடியாது.

இந் நிலையிலேதான் வானநூல் (Astronomy), ஞாலநூல் (Geology), நிலநூல் (Geography), ஆவிமண்டல நூல்(Meteorology), முதலிய அறிவியற் பகுதிகள் நமக்குப் பயன்படுகின்றன. இவை யனைத்தும் ஒரே முகமாக உலகில் மிகப் பழைய பகுதியும், நாகரிகத் தொடக்கம் ஏற்பட்ட இடமும் தென் இந்தியா அல்லது அதற்கும் தெற்கில் இருந்த லெமூரியா ஆகவே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

ஆயினும் உண்மையை நிலைநாட்டும் வகையில் மொழி இயல் ஆராய்ச்சியால் ஏற்படும் துணை கொஞ்ச நஞ்சமன்று. எடுத்துக்காட்டாக இந்தியாவில் ஆரியர் நாகரிகத் தாக்கு மிகவும் குறைவு; திராவிடர் நாகரிகத்துக்கே பெரும்பான்மை என்பதை, அண்மையில் சிந்து நாட்டில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் காட்டுவதற்கு முன்னமே, தெளிவுபட உணர்த்தியது மொழியியலே.

"கற்காலம்"(Stone Age) என்ற தலைப்புக் கொண்ட நூலில் திரு. பி.டி. சீனிவாச ஐயங்கார் அவர்கள், "மொழி ஒப்புமையால் நோக்கத் தென் இந்திய மொழிகள் மட்டுமல்ல; வட இந்திய மொழிகளும், வடமொழியுங்கூடச் சொற்பயன், சொற்றொடர் அமைப்பு முதலிய வகைகளில் ஒன்று போலவே இருக்கின்றன. இம் மொழிகளுள் ஏதாவதொன்றினின்றும் இன்னொன்றுக்கு மொழிபெயர்க்க வேண்டுமாயின் அகர வரிசையின் துணைகொண்டு மொழிக்கு மொழி மாற்றினால் போதும்", என்று கூறுகிறார்.

இவ் வகையில் வட இந்திய மொழிகள் பிற ஆரிய மொழிகள் போலாமை நோக்க, அவற்றின் அடிப்படைச் சட்டம் வடமொழியோ ஆரியமோ அன்று; பழந்தமிழ் அல்லது திராவிட மூல மொழியேயாகும் என்பது வெள்ளிடைமலை. இன்னும் சற்று நுணுகி நோக்கினால் வட நாட்டார் தம் மூலமொழி எனக் கொண்ட வடமொழிதானும் திராவிடத்தாக்கு உடையதே என்பது தெரியவரும்.

மேலும் மொழியியலின் தந்தை என்று புனைந்து கூறப்படும் பேரரறிஞர் கால்டுவெல் (Caldwell) அவர்கள் திராவிட மொழிகள் சித்திய (Scythian) மொழிகளுடன் இன்றியமையா உறவுடையது என்று கூறுகிறார். அஃதாவது நான்காம் ஆறாம் வேற்றுமை உருபுகள், உளப்பாட்டுத் த்ன்மைப் பன்மை, எதிர்மறைவினை, தழுவும்சொல் முந்தி நிற்றல், எச்சங்களே உரிச்சொல்லாக நிற்றல், வினைத் தொடர்ச்சியினிடமாக எச்சங்களையாளுதல், உயிரிடைப்பட்ட வன்மை திறந்த உயிர்ப்புடைய மென்மை இனமாக மாறி ஒலித்தல், நாவடி மெய்களாகிய ட ண ள உடைமை, சுட்டு, எண், இடப்பெயர் முதலியவை இம் மொழிகளுள் ஒற்றுமை யுடையவையாகக் காணப்படும். சித்திய இனம் ஆசியா ஐரோப்பா முழுமையிலும் பரந்து கிடப்பதால் திராவிட இனத்தின் தொடர்பும் இவ்விரு கண்டங்களையும் தழுவியுள்ளதென்று பெறப்படுகிறது.

பேரறிஞர் போப்பையர் (G.U.Pope), "தமிழ், ஐரோப்பிய மேலை நாடுகளில் உள்ள கெல்த்திய (Celtic) மற்றும் தெயுத்தானிய (Teutonic) மொழிகளை ஒத்திருக்கின்றது என்கிறார். இவ்விரண்டு இனங்களும் ஆரிய இனத்தின் மிகத் தொலைவுக் கிளைகள் என்பர். இன்னும் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய, அமெரிக்க மொழிகளும் வியத்தகு முறையில் தமிழ்க்குழுவை ஒத்துள்ளன" என்று அறிஞர் கூறுகின்றார்.

இதனால் தமிழ்க்குழு உலக முழுமையும் உறவுடையது எனப் பெறப்படுகின்றது.

No comments: