Saturday, December 15, 2007

குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு

பன்மொழிப்புலவர்
கா.அப்பாத்துரை, எம்.ஏ., எல்.டி

பொருளடக்கம்
௧. குமரிநாடு பற்றிய தமிழ்நூற் குறிப்புக்கள்
௨. மொழிநூல் முடிவு
௩. தென் இந்தியாவின் பழமைக்கான சான்றுகள்
௪. குமரிக் கண்டம் (லெமூரியாக் கண்டம்) என்ற ஒன்றிருந்ததா?
௫. ஞாலநூல் காலப் பகுதிகள்
௬. உலக மாறுதல்களும் இலெமூரியாக் கண்டமும்
௭. இலெமூரியாவின் இயற்கை இயல்புகள்
௮. இலெமூரிய மக்களது நாகரிகம்
௯. தற்கால நாகரிகமும் இலெமூரியரும்
10. இலெமூரியாவும் தமிழ்நாடும்

௧. குமரிநாடு பற்றிய தமிழ்நூற் குறிப்புக்கள்

இன்றைய தமிழ்நாடு திருவேங்கடம்(இன்றைய திருப்பதி) முதல் கன்னியாகுமரி வரை பரந்து கிடக்கின்றது. இதில் இன்றைய அரசியல் பிரிவுப்படி ஏறக்குறைய பத்துக் கோட்டங்கள்(தற்போது 30 மாவட்டஙகள்) அடங்கியுள்ளன. ஆனால், முன் நாட்களில் தமிழ்நாட்டின் பரப்பு இதனினும் பன்மடங்கு மிகுதியாக இருந்ததென்று கொள்ளச் சான்றுகள் பல உள்ளன.

மிகப் பழைய இலக்கணங்களிலும், நூல்களிலும், உரைகளிலும் குமரிமுனைக்குத் தெற்கே நெடுந் தொலை நிலமாயிருந்தது என்றும், அந் நிலப்பகுதி பல்லூழிக் காலம் தமிழ்நாட்டின் ஒரு கூறாயிருந்து பின் படிப்படியாகக் கடலுள் மூழ்கிவிட்டதென்றும் ஆசிரியர்கள் உரைக்கின்றனர்.

இப் பரப்பிலிருந்த நாடுகள், அரசுகள், மலைகள், ஆறுகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புக்களும், விவரங்களும் சிலப்பதிகாரம், புறநானூறு முதலிய பழைய நூல்களில் காணப்படுகின்றன. அங்கிருந்த மலைகளுள் குமரி மலை ஒன்று என்றும், ஆறுகளுள் குமரி, பஃறுளி இவை தலைமையானவை என்றும் தெரிகின்றன.

இந் நாடு தமிழகத்தின் ஒரு பகுதி மட்டுமன்று; தமிழரினம், தமிழ் நாகரிகம் என்பவற்றின் தாயகமே என்று கூற வேண்டும்.ஏனெனில், தமிழைத் தொன்று தொட்டு வளர்த்த சங்கங்கள் மூன்றனுள், தலைச் சங்கம் நடைபெற்ற தென்மதுரையும் இடைச்சங்கம் நடைபெற்ற கவாடபுரமும் இக் குமரிப் பகுதியிலேயே இருந்தன.

எனவே, தலைச்சங்க காலமாகிய முதல் ஊழியிலும்(ஊழி என்றால் நெடுங்காலம் என்று பொருள்) இடைச்சங்க காலமாகிய இரண்டாம் மூன்றாம் ஊழிகளிலும் இக்குமரிப் பகுதியிலேயே தமிழர் ஆட்சியும் நாகரிகமும் மொழி வளர்ச்சியும் ஏற்பட்டன என்பதும், தெற்கிலிருந்து கடல் முன்னேறி வரவர அவர்கள் வடக்கு நோக்கிப் பரந்து சென்றனர் என்பதும் விளங்குகின்றன.

தமிழ் நூல்களில் மூன்று கடல் கோள்களைப் பற்றித் தெளிவான குறிப்புக்கள் காணப்படுகின்றன.

முதல் கடல்கோளால் பஃறுளியாறும் குமரிக்கோடும் கடலில் கொள்ளப்பட்டன. ப்ஃறுளியாற்றின் கரையிலிருந்த தென்மதுரையே பாண்டியன் தலைநகரும், தலைச்சங்கம் இருந்த இடமும் ஆகும். இக்கடல்கோள் நிகழ்ந்த காலத்திருந்த பாண்டியனே நெடியோன் என்று புறநானூற்றிலும், நிலந்தரு திருவிற் பாண்டியன் என்று தொல்காப்பியப் பாயிரச் செய்யுளிலும் குறிக்கப்பட்டவனாவன்.

கடல்கோளின் பின்னர் இவன் வடக்கே போய்க் கவாடபுரத்தைத் தலைநகராக்கிக் கொண்டான். இங்கே தான் இடைச் சங்கம் நடைபெற்றது.

தலைச்சங்க நாட்களில், பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடைப்பட்ட பகுதி, அளவிலும் சிறப்பிலும் பாண்டி நாட்டின் மிகச் சிறந்த பாகமாயிருந்திருக்க வேண்டும். அது 49 நாடுகளாக வகுக்கப்பட்டிருந்ததென்றும், இரண்டு ஆறுகட்குமிடையே 700 காவத(ஒரு காவதமென்றால் ஏறக்குறைய ஒரு மைல், 700 மைல்கள்=1125கி.மீ) அளவு அகன்று கிடந்ததென்றும் அறிகிறோம்.

இரண்டாவது கடல்கோளால் கவாடபுரம் கடல் கொள்ளப்பட்டது. அதன்பின் சிலகாலம் மணவூர் பாண்டியன் தலைநகரமாக இருந்தது. பின் மூன்றாம் முறைக் கடல்கோளால் அம் மணவூறும், குமரியாறும் அழியவே, பாண்டியன் மதுரை வந்து அங்கே கடைச் சங்கத்தை நிறுவினான்.

சிலப்பதிகாரத்தில் மாடலன் குமரியாற்றில் நீராடியதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், கதை முடிந்தபின் எழுதப்பெற்ற பாயிரத்தில் தொடியோள் பௌவ மெனக் குமரிக் கடலாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு காலப்பகுதிகளுக்கிடையே, அஃதாவது கோவலனிறந்து சில நாட்களுக்குப் பின்னாகக் குமரியாறு கடல் கொள்ளப்பட்டுக் குமரிக் கடலாயிற்று என்பர் பேராசிரியர்.

குமரியாறு கடலுள் அமிழ்ந்த காலத்தை ஒட்டியே மணிமேகலையுட் கூறப்பட்டபடி காவிரிப்பூம்பட்டினம் கடல் வயமானது. வங்காளக் குடாக்கடலில் உள்ள சில பெரிய தீவுகளும் இதனுடன் அழிந்திருக்க வேண்டும். "நாகநன் னாட்டு நானூ றியோசனை வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும்" என்றது காண்க.

இதனோடு, மேற்குத் தொடர்ச்சிமலை இன்று கடலிருக்கும் இடத்திலும் தொடர்ந்து கிடந்ததென்றும், ஆண்டு அதற்கு மகேந்திரம் என்பது பெயர் என்றும் வடநூல்கள் கூறுகின்றன. இராமயணமும் அனுமான் கடல்தாண்டியது மகேந்திர மலையிலிருந்தே யென்றும், அது பொதிகைக்கும் கவாடபுரத்திற்கும் தெற்கிலிருந்ததென்றும் விவரித்துரைக்கின்றது.

முருகன் சிவன் முதலிய தமிழ்த் தெய்வங்கள் மகேந்திர மலையில் உறைந்தனர் என்றே தமிழர் முதலில் கொண்டனர். கடல்கோளின் பின்னர் அவர்களது இடம் அன்றைய தமிழ்நாட்டின் வடக்கில் இருந்த மேலைத் தொடர் என்று கொள்ளப்பட்டு, வடமலை ஆயிற்று. நாளடைவில் வடமலை என்பதே மேருமலை என்றும் கயிலை என்றும் கருதப்பட்டது. சிவதருமோத்தரத்தில் குறிப்பிட்டுள்ள உன்னதத் தென் மயேந்திரம் இதுவே என்க. திருவாசகத்தில்,

"மன்னு மாமலை மகேந்திர மதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்"

என்று இதனையே மணிவாசகப் பெருந்தகையார் ஆகம்ங்கருளிய இடமாகக் குறிப்பிடுகின்றார்.

தமிழ்நாட்டின் தென்கரை மட்டுமன்று, அதன் கீழ்க்கரையும் இலங்கையுங் கூடப் பல் சிறு கடல்கோள்களுக்கு உட்பட்டன என்று தோன்றுகிறது. வடமொழி வானநூலார் தமது உலக நடுவரையை இலங்கையில் ஏற்படுத்தினர். ஆனால், இன்று அஃது இலங்கை வழிச் செல்லாமல் கடலூடு செல்வதிலிருந்து, அந்த இடம் முன்பு இலங்கையைச் சார்ந்திருந்ததென்று உய்த்துணரக் கிடக்கின்றது.

மேலும் கேள்வியறிவால் தென் இந்தியாவைப் பற்றி எழுதும் மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க அறிஞர் இலங்கையைத் தாப்பிரபனே என்று கூறுவதுடன் அஃது இந்தியாவினின்று ஓர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கின்றார். இதிலிருந்து தாமிரபரணி என்ற பொருநையாறு கடலுள் மூழ்கிய நிலத்தின் வழியாக இலங்கையூடு சென்றிருக்க வேண்டும் என்றேற்படும்.

கந்தபுராணத்தில் சொல்லப்படும் வீரமகேந்திரம் இலங்கையின் தெற்கே பல கடல்கோள்களுக்குத் தப்பிக் கிடந்த ஒரு சிறு தீவேயாகும்.

கிழக்குக் கரையில் காவிரிப்பூம்பட்டினமேயன்றி வேறு பல தீவுகளும் அழிந்தன என்று மேலே கூறினோம். புதுச்சேரிக்கு மேற்கே பாகூர்ப்பாறையிலுள்ள கல்வெட்டில் அது கடலிலிருந்து நாலுகாதம் மேற்கே இருப்பதாகக் குறிப்புக் காணப்படுகிறது. ஆனால், இன்று அது கடலிலிருந்து ஒரு காதமே விலகியிருப்பதால் கடல் மூன்று காதம் உட்போந்ததென்பது விளங்கும்.

சீகாழி, தோணிபுரம் என்றழைக்கப்படுவதும், மதுரைவரை ஒருகால் கடல் முன்னேறி வர, பாண்டியன் வேல் எறிந்து அதனை மீண்டும் சுவறச் செய்தான் என்ற திருவிளையாடற் கதையும், கன்னியாகுமரியில் இன்று உள்ள மூன்று கோயில்களும் ஒன்று கடலுள் மூழ்கி அழிந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுவதும் தமிழ்நாட்டுள் கடல் பலகால் புகுந்து அழிவுசெய்ததென்பதைக் காட்டுவனவாகும்.

மேலும் கேள்வியறிவால் தென் இந்தியாவைப் பற்றி எழுதும் மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க அறிஞர் இலங்கையைத் தாப்பிரபனே என்று கூறுவதுடன் அஃது இந்தியாவினின்று ஓர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கின்றார். இதிலிருந்து தாமிரபரணி என்ற பொருநையாறு கடலுள் மூழ்கிய நிலத்தின் வழியாக இலங்கையூடு சென்றிருக்க வேண்டும் என்றேற்படும்.

கந்தபுராணத்தில் சொல்லப்படும் வீரமகேந்திரம் இலங்கையின் தெற்கே பல கடல்கோள்களுக்குத் தப்பிக் கிடந்த ஒரு சிறு தீவேயாகும்.

கிழக்குக் கரையில் காவிரிப்பூம்பட்டினமேயன்றி வேறு பல தீவுகளும் அழிந்தன என்று மேலே கூறினோம். புதுச்சேரிக்கு மேற்கே பாகூர்ப்பாறையிலுள்ள கல்வெட்டில் அது கடலிலிருந்து நாலுகாதம் மேற்கே இருப்பதாகக் குறிப்புக் காணப்படுகிறது. ஆனால், இன்று அது கடலிலிருந்து ஒரு காதமே விலகியிருப்பதால் கடல் மூன்று காதம் உட்போந்ததென்பது விளங்கும்.

சீகாழி, தோணிபுரம் என்றழைக்கப்படுவதும், மதுரைவரை ஒருகால் கடல் முன்னேறி வர, பாண்டியன் வேல் எறிந்து அதனை மீண்டும் சுவறச் செய்தான் என்ற திருவிளையாடற் கதையும், கன்னியாகுமரியில் இன்று உள்ள மூன்று கோயில்களும் ஒன்று கடலுள் மூழ்கி அழிந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுவதும் தமிழ்நாட்டுள் கடல் பலகால் புகுந்து அழிவுசெய்ததென்பதைக் காட்டுவனவாகும்.

தலை இடை கடைச்சங்கங்களில் இன்னின்ன புலவர்கள் இருந்தனர், இன்னின்ன நூல்கள் செய்தனர், இன்ன இலக்கணம் கையாளப்பட்டது என்ற விவரங்கள் இறையனாரகப் பொருளுரையிலும், பிற நூல்களிலும் கூறப்படுகின்றன.

கடல்கோள்கள் காரணமாகவும், போற்றுவாரற்றும் அந்நாளைய நூல்களுள் பல இறந்துபட்டன. கடைச் சங்கப் புலவர்கள் காலத்திலும், ஏன், பிந்திய நாட்புலவர்கள் காலத்திலும் கூட, இவற்றுட் பல நூல்கள் முழுமையாகவோ, பகுதியளவிலோ நிலவியிருந்தன என்பது அவர்கள் குறிப்புக்களாலும் மேற்கோள்களாலும் அறியக் கிடக்கின்றன.

இங்கனம் தலைச்சங்க இடைச்சங்க நூல்கள் மிகுதியாக அழிந்துபோக, நமக்கு இன்று மீந்துள்ளது தொல்காப்பியம் என்ற இலக்கண நூலொன்றேயாகும். அகத்தியம் முதலிய வேறு பல நூல்களுக்கு மேற்கோள்கள் வாயிலாகச் சில சில பாக்களோ அல்லது குறிப்பு வாயிலாகப் பெயர் மட்டிலுமோ கிடைக்கின்றன.

ஆன்றோர் உரையும், முன்னோர் மரபும் இங்ஙனம் தெளிவாகச் சங்கங்ககது வரலாற்றையும் குமரிநாட்டின் மெய்ம்மையையும் வலியுறுத்துகின்றன; ஆயினும் இக்காலத்தார் சிலர் இவற்றை ஐயுறத் தொடங்குகின்றனர். இந்நூல்களில் சங்கங்கள் நடைபெற்றதாகக் கூறும் கால எல்லை ஆயிரக்கணக்காயிருப்பதும், அவை தரும் நூற்பட்டிகைகள் பெரும்பாலன இன்று காணப்பெறாமையுமே இவ்வையப்பாட்டிற்குக் காரணமாவன.

தமிழ் நாகரிகத்தின் தொன்மையைக் கணித்தறிவார்க்கு இச்சங்க வாழ்வின் எல்லை அவ்வளவு நம்பத் தகாததன்று. இன்று வடநாட்டில் ஹரப்பா, மொஹஞ்சதாரோ முதலிய இடங்களில் கண்ட கல்வெட்டுக்களால் தமிழர் நாகரிகம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னரேயே இந்தியநாடு முழுவதும் பரவியிருந்தது என்பது புலனாகின்றது.

அதோடு அவற்றைப் பற்றிய குறிப்புக்கள் காலத்தாலும் இடத்தாலும் பிரிக்கப்பட்ட வேறுவேறான பல நூல்களிலும் ஒன்றுக்கொன்று முரணாகாமல் பொருத்தமாகவே கூறப்பட்டிருக்கின்றமையும், தமிழ் நூல்களேயன்றி வடநாட்டு நூற்குறிப்புகளும் பண்டைய கிரேக்க அறிஞர்தங் குறிப்புகளும் சங்க வரலாற்றைப் பல இடங்களில் வலியுறுத்துகின்றமையும், தற்கால மேனாட்டு ஆராய்ச்சியுரைகளும், கண்கூடான பல நடைமுறையறிவுகளும் சேர்ந்து இச்செய்தி வெறும் புனைந்துரையன்று, மரபு வழக்காக வந்த மிகப் பழமையானதொரு செய்தியே என்பதை மெய்ப்பிக்கும்.

வடமொழிச் சான்றுகளுட் சிலவற்றை முன்பே குறிப்பிட்டுள்ளோம். அவற்றுள் மறுக்கக்கூடாத தெளிவான சான்று முதல் கடல்கோள் பற்றியதாகும். அக்கடல்கோளுக்குத் தப்பிநின்று திரும்பத் தமிழ் நாகரிகத்தை நிலைநாட்டிய நிலந்தரு திருவிற் பாண்டியனை திராவிட நாட்டரசனாகிய சத்திய விரதனென்றும், அரச முனி என்றும், மனு என்றும் வடநூல்கள் பலவாறாகக் கூறின.

ஊழி வெள்ளத்தினின்றும் தப்பி அவனது பேழை தங்கிய இடம் பொதிகைமலை ஆகும். இதனையே வடமொழியாளர் மலையமலை என்பர். இஃது அன்றையப் பாண்டியன் பெரும்பகுதிக்கும் வடக்கே இருந்ததால் வடமலை எனப்பட்டுப் பின் பெயர் ஒற்றுமையால் மேருவுடன் வைத்தெண்ணப்பட்டது.

இவ்வெள்ளக் கதைகள் பல புராணங்களிலும் காணப்படுபவை. அன்றியும் இராமாயணத்தில் இரண்டாம் ஊழியில் மணிகளாலும் முத்துக்களாலும் நிரம்பப் பெற்றுச் சிறப்புடன் விளங்கிய பாண்டியன் தலைநகரான கவாடபுரத்தைப் பற்றியும், மகாபாரதத்தில் அதன்பின் மூன்றாம் ஊழியில் தலைநகராயிருந்த மணவூரைப் பற்றியும் விவரிக்கப்பட்டிருப்பதுங் காண்க.

இங்ஙனம் இயற்கைச் சான்றுகளும், தென்மொழி வடமொழி மேற்கோள்களும் ஒரே முகமாக நிலை நாட்டும் இவ்வுண்மையை எளிதில் மறுக்கவோ, புறக்கணிக்கவோ இயலாது.

பின்வரும் பிரிவுகளில் மேல்நாட்டறிஞர் பல வேறு ஆராய்ச்சித் துறைகளையும் சீர்தூக்கிப் பார்த்து இதே முடிவை ஏற்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டுவோம்.

No comments: