Sunday, December 30, 2007

9. தற்கால நாகரிகமும் இலெமூரியரும்

உலகியலறிஞர், உள்ள நிலைகளில் மூவகைப் பாகுபாட்டைப் பிரித்தறிகின்றனர். முதலாவது அறிவுப் பகுதி அல்லது உணர்வுநிலை; இரண்டாவது உணர்ச்சிப் பகுதி அல்லது அரை உணர்வுநிலை; மூன்றாவது உணர்வின்மை நிலை. இவற்றையே தமிழ்நூல் வல்லார், நனாநிலை, கனாநிலை, சுழுத்தி நிலை எனக் கூறுவர்.

இவற்றுள் தற்கால மாந்தர் உணர்ச்சியினின்று விடுதலை பெற்று, அறிவினாலேயே உயர்வுபெற்று வருகின்றனர். இவ்வறிவை நன்கு பயன்படுத்தக் கற்குமுன் பிற விலங்கினங்களைப் போன்று மனிதனும் உணர்ச்சியினாலேயே எல்லாக் காரியங்களையும் செய்திருக்க வேண்டும்.

ஆசிரியர் ஸ்காட் எலியட், ருடால்ப் ஸ்டைனர் முதலியோர் தமது மனிதத் தோற்றக் கொள்கைக்கிணங்க, முதல் இரண்டு நில ஆக்க இயல்காலப் பகுதிகளிலும் இருந்த மக்கள் உடம்பே அற்ற மூன்றாவது கழுத்திநிலையை ஒட்டிய முந்திய கற்பத்து உயிர்கள் என்றும், மூன்றாங் காலத்தைச் சார்ந்த இலெமூரிய மக்கள் உணர்ச்சியையே முழு ஆற்றலாகக் கொண்டவர் என்றும், அவ்வுணர்ச்சி தற்கால மனிதரைவிட அவர்களிடம் கூடுதலாக இயற்கையாகவே அமைந்திருந்தபடியால் தற்காலத்தவரால் செய்வதற்கு அரிய சில செய்கைகளையும் உணர்ச்சியின் உதவியால் செய்தனர் என்றும், அதன்பின் நான்காம் காலத்திலிருந்த அத்லாந்தியர் அறிவைப் பயன்படுத்தினும் அதனைத் தன்னல முறையில் ஆற்றியதால் அழிந்தனர் என்றும், ஐந்தாம் காலத்தவராகிய தற்கால ஐரோப்பியர் அறிவை நன்முறையில் பயன்படுத்த முயல்கின்றனர் என்றும் மனித வளர்ச்சிபற்றிக் கூறுகின்றனர்.

இன்னும், முதன் முதல் பால் பாகுபாடு ஏற்பட்டது கூட இலெமூரியாவிலேயே என்றும், எழுத்தும் பேச்சும் அதற்குப் பிந்தி ஏற்பட்டதே என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், ஆசிரியர் எஸ்.கார்வே காலிபோர்னியாவிலும் பிற இடங்களிலும் கண்ட சான்றுகளால் இத்தகைய புனைவியல் தடுமாற்றங்களுக்கு இடமில்லாமல் செய்து விட்டனர். இலெமூரியர் எழுத்து வாசனையுடையவர். பேசத்தெரிந்தவரேயாயினும், பேச்சின்றிக் கருத்து மாற்றும் ஆற்றலும் உடையவர் என்றும், இவற்றின் உதவியால் தற்கால ம்னிதரைவிட அறிவியற் கலை, கருவியாற்றல், நாகரிகம் ஆகிய பகுதிகளில் பல வழியில் முன்னேறியவர் என்றும் கொள்கிறார்.

முன்கூறிய ஆசிரியர்கள் தடுமாற்றங்களுக்குக் காரணம் அவர்கள் தாம் கண்கூடாகக் கண்ட அறிவியல் உண்மைகளையும் தமது சமயக் கருத்துக்கு ஒப்பத் திருத்தி அமைக்க முயல்வதனாலேயே என முன்னர்க் கூறினோம்.

அறிவியல் முறைப்படி வரலாற்றாராய்ச்சி வழியில் அவர்களைப் பின்பற்றிச் சென்று பார்த்தால் இலெமூரிய நாகரிகம் மனிதரின் மிகப் பழைமையான நாகரிகம் என்பதும், நெடுநாள் வளர்ச்சியால் சிலவகைகளில் தற்கால நாகரிகத்துக்கு ஒப்பாகவோ மிகையாகவோ காணப்படினும் பலவகைகளில் அதன் பழங்காலத்தைக் குறிக்கும் குறைபாடுகளில்லாதது அன்று என்பதும் அதற்குப் பின்னும், அத்லாந்திய நாகரிகத்திற்குப் பின்னும், மற்றும் அடிக்கடி வேறு காலங்களிலும் மனித நாகரிக வளர்ச்சியில் உயர்வு தாழ்வுகளும், மாற்றங்களும், அழிவுகளும், புது வளர்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன என்பதும் தெளிவாகக் காணப்படுகின்றன.

தற்கால (அஃதாவது, சிறப்பாக மேல்நாட்டு) நாகரிகத்தைவிட இலெமூரியர் சிறந்து விளங்கிய பகுதி அவர்களது வாழ்க்கை அமைதியிலேயே, அவ்வுயர்வு உண்மையில் இலெமூரியருக்கு மட்டுமன்று; பிற்போக்கு உடையவை என்று மேல்நாட்டாராற் கருதப்படும் பழைய கீழ்நாட்டு நாகரிகங்கள் அனைத்திற்கும் பொதுவானதேயாகும். தற்கால மேல்நாட்டு நாகரிகத்தின் தன்னலமும், போட்டியுணர்ச்சியும், அழிவாற்றலும் மேம்பாடுபோலத் தோற்றினும் அவை அந்நாகரிகத்தின் அடிப்படையையே அழிக்கும் பெருந் தீங்குகளாகும்.

இலெமூரியரது வாழ்க்கையமைதிக்கேற்ப, இலெமூரியரின் சமய உணர்ச்சி நடுநிலையும், நேர்மையும் உடையது. இன்று உலகில் காணப்படும் கடவுள் மறுப்புணர்ச்சியும் அவர்களிடையில்லை. அதற்கு மாறாக கீழ்நாட்டாரிடை அடிக்கடி காணப்படுகின்ற கடவுள் பேராற் காட்டப்படும் வெறியும் அங்கில்லை. போலி உணர்ச்சியோ மருந்திற்கும் இருந்ததில்லை. சமயம், அவர்கள் வாழ்க்கையோடு சேர்ந்த ஒரு வாழ்க்கை அமைதி. தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும், இன்னும் சிறப்பாகச் சிலப்பதிகாரத்திலும் இத்தகைய சமய அமைதியை நாம் காணலாம்.

வாழ்க்கையிலும் இலெமூரியரிடைப் பொருளற்ற போட்டியில்லை. அதற்கான விரைவும் இல்லை. மாலையில் உலாவப் போகிறவர்கள் அதற்காகக் கடற்கரை செல்ல 60 கல் விரைவில் ஊர்தியில் செல்கின்ற புதுமை இக்காலத்தது. ஒரு நாட்டில் மக்கள் முற்றிலும் கைத்தொழிலே செய்து அத்தொழிற் பயனாகிய பொருள்களை அடுத்த நாட்டார் வாங்க வேண்டுமென்று வற்புறுத்துவதும், நெடுந்தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை மாற்றாக வாங்குவதும் இதை வகைப்பட்ட குழப்பத்தைச் சார்ந்ததே. இலெமூரியரது வாழ்க்கை, இதிலும் கீழ்நாட்டாரது வாழ்க்கையையே போன்றதாகும்.

அறிவியல் கலைவகைகளில் எல்லாத் துறைகளிலும் இன்றைய மேல்நாட்டறிவுக்கு இலெமூரியர் அறிவு ஒப்பாக மாட்டாது. ஆனால், அவர்கள் குறைபாடு பெரிதும் அழிவுத்துறை பற்றியது என்பதும் உயர்வு ஆக்கத்துறை பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கவை. வீடு நகரம் முதலியவற்றின் அமைப்புகளிலும் உடை வகையிலும் உணவு வகையிலும் அவர்கள் உடல் நலத்தையும் இன்பத்தையும் போற்றினரேயன்றிப் பகட்டையும் ஆரவாரத்தையும் பாராட்டவில்லை.

இந்த அடிப்படையான உயர்நிலை (ஆன்மிக) உண்மையை விட்டு விட்டுத் தற்கால அறிவியல் நோக்குப்படி பார்த்தாற்கூட இலெமூரியர் சில வகைகளில் தற்கால மக்களைவிட முற்போக்கானவர் என்று தெரிகின்றது. இதற்கு நாம் முற்கூறிய செய்தியோடு கூட அவர்களது நெடுங்கால நடைமுறையறிவும் ஒரு காரணமாகும். நமது தற்கால மேல்நாட்டு நாகரிகம் சில நூற்றாண்டுகளே பழைமையுடையது. அதற்கு அடிப்படையாயிருந்த கிரேக்க உரோம நாகரிகங்கள் கூட இரண்டு மூன்று ஆயிர ஆண்டுகளுக்கு முந்தியவையல்ல. இந்த அளாவில்கூட இந்நாகரிகம் முழுத் தன்னாட்சி (சுதந்தரம்) உடையதன்று. ஏனெனில் இலெமூரிய நாகரிகத்தின் கிளைகளாகிய இந்திய நாகரிகம், செமித்திய நாகரிகம் இவற்றின் பல பகுதிகளை அது பல காலங்களில் தன்னுள் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கு மாறாக, இலெமூரிய நாகரிகம் தன்னாட்சியுடன் ஒரு நூறாயிர ஆண்டு முதல் இரண்டு நூறாயிர ஆண்டு வரையிற் பயின்றதொன்றாகும்.

இந் நடைமுறையறிவால் தற்காலத்தவருக்குத் தெரியாத பல மூலப்பொருள்களும்(Elements), கருப்பொருள்களும்(Minerals), ஒண்பொருள்களும்(Metals) அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவற்றுள் நீரை விலக்கும் ஆற்றல் வாய்ந்த கல் ஒன்றும், பேரொளிகள் தரும் ஆற்றலுடைய ரேடியம் என்றதற்கான புதிய ஒண்பொருளோ ஒன்றும், தற்காலப் பூச்சுமண்ணை(cement)ப் போல் மண்ணை உறுதி செய்யக் கூடிய வெண் கற்பொடி ஒன்றும் தலைமையானவை என்று முன்னர்க் கூறியுள்ளோம்.

இவற்றின் உதவியால் அவர்கள் பலவகை ஊர்திகளும், வான ஊர்திகளும், உறுதியான பாதைகளும் அமைத்தனர். மூலப் பொருள்களின் அறிவாலும், பொருள்களின் ஒப்பநிலை(Balance)அறிவாலும், மரக்கட்டைகளைப் பாதுகாத்து வைக்கும் அறிவாலும், அவர்கள் 30,000 ஆண்டளவும் அழியாத கட்டிடங்களும் கோவில்களும் நிறுவினர். அவர்களது ஒளியறிவு மிகுதியால் தற்காலத்தவரால் வியக்கத்தக்க வண்ணம் பல நூறு கல் தொலைவரை ஒளிவீசும் விளக்கங்களை அவர்கள் உண்டு பண்ணி இரவைப் பகலாகச் செய்திருந்தனராம். கலைகளிலும் ஓவியத்திலும் மற்றும் அவர்களது திறன் தற்காலத்தவர் அழுக்காறடையத்தக்கதாகவே இருந்தது.

ஆனால், இத்தனை திறனும் மனித ஆக்கத் துறையில் சென்றதேயன்றி அழிவுத் துறையில் செல்லவில்லை; அத்லாந்திய(Atlantis) நாகரிக காலத்திலும், அதன்பின் செமித்தியர் நாளிலும் மக்கள் ஒருவரோடு ஒருவர் போர்த் திறங்காட்டி அழிவு செய்தபடி அவர்கள் செய்யவுமில்லை. செய்ய முயலவுமில்லை. தம்மைச் சுற்றியுள்ள பெரிய விலங்கினங்கள் பாம்புகள் இவற்றிலிருந்துகூட அவர்கள் தப்பி ஒதுங்கி நிறக் முயன்றனரேயன்றி அவற்றை அழிவு செய்ய முற்பட்டதாகத் தெரியவில்லை.

அழிவுத் திறம் மிகுந்த நாகரிக காலங்களிலேதான் கோட்டை கொத்தளங்களும், பெரு நகரங்களும் மிகுந்திருக்கும். அத்லாந்திய நாகரிகம் இத்தகையதே. ஆனால், இலெமூரியாவில் வீடுகளும் ஊர்களும் மனித வாழ்க்கை நலமொன்றையே நோக்கமாகக் கொண்டு, தற்கால மலையாள நாட்டு வீடுகளைப் போன்று, இடைவெளிகளும் சோலைகளும் விட்டுக் கட்டப்பட்டவையேயாகும். ஆங்காங்குள்ள சில நகரங்களும் வாணிபத் துறைகள் அல்லது தொழில் துறைகளாகவே அமைந்திருந்தன.

இன்று இலெமூரியர் நாகரிகத்தைப் பற்றி நாம் அறிய உதவும் கட்டிடங்கள் அவர்கள் கோயில்கள் மட்டுமேயாகும். அவர்கள் ஊர்களும் வீடுகளும் இன்றைய ஜப்பானியர் வீடுகளைப் போல் எரிமலை, நில அதிர்ச்சி முதலியவை காரணமாக அழியும் பொருள்களாலேயே கட்டப்பட்டன. இலெமூரியர் உலகியல் வாழ்வில் பற்றுக் குறைந்திருந்ததும் இதற்கு இன்னொரு காரணம். தமிழரும் இதே கருத்துடையர் என்படைத் தமிழ் மூதாட்டியர் "இடம்பட வீடெடேல்" என்று கூறியிருப்பதனால் அறிக.

No comments: