Sunday, December 30, 2007

இலெமூரியாவும் தமிழ்நாடும்

இதுகாறும் இலெமூரியர்களைப் பற்றி வரைந்த குறிப்புகளால் இலெமூரியாவிற்கும் தமிழ்நாட்டிற்குமுள்ள இன்றியமையாத் தொடர்புகள் எளிதில் விளங்கத் தக்கவையேயாயினும், முடிவுரையாக ஈண்டு அவற்றைத் தொகுத்துக் கூறுகிறோம்.

முதன் முதலாகத் தமிழ் நூல்களின் பழைமையும் தமிழ் நூல்களிற் குறிப்பிட்டுள்ள முச்சங்கங்களின் பழைமையும், வடமொழி நூலாகிய வான்மீகரது இராமாயணத்தாலும், புராணங்களாலும் நன்கு வலியுறுத்தப்படுகின்றமையோடு தற்கால ஆராய்ச்சி நூல்களான ஞால நூல், நில நூல், ஆவிமண்டல நூல் முதலியவற்றுடன் முற்றும் பொருத்தமுடையன என்றும் காட்டப்பட்டது.

உலகின் மிகப் பழைமையான நிலப்பகுதி இலெமூரியாவே என்பதும், தமிழ் நூல்களில் கூறப்பட்ட குமரிக் கண்டம் அந்த இலெமூரியாகவோ அல்லது அதன் பகுதியாகவோ இருக்க வேண்டும் என்பதும், அந்த இலெமூரியாவுக்கே சிறப்பாகக் கூறப்படும் பாறை வகைகளும், செடி கொடி இனங்களும், ஊர்வன, பறப்பன, நடப்பனவாகிய உயிரினங்களும் தமிழ்நாட்டில் இன்றும் உள்ளன என்பதும் அந் நூல்கள் நமக்கு எடுத்துக் கூறும் உண்மைகளாகும்.

இவையேயன்றி, இலெமூரியர் நாகரிகம், சமயம், ஒழுக்கநிலை முதலியவற்றைப் பற்றி நாம் எடுத்துக் கூறியவற்றுள்ளும் எத்தனையோ செய்திகள் இன்றைய உலகில் தமிழ்நாட்டினர்க்கே சிறப்பாக உரியவை என்பது போதரும். அவற்றுள் குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே இங்கே விதந்துரைக்க எண்ணுகிறோம்.

இலெமூரிய மக்களுக்கு நெற்றியில் கண்போன்ற ஓர் உறுப்பு உண்டு என்பது தற்காலத்தவர்க்கு எவ்வளவோ புதுமையான, நம்புதற்கரிதான செய்தியாயினும், தமிழர் தெய்வங்களின், அவற்றிலும் சிறப்பாகச் சைவசமயச் சார்பான சிவன், பிள்ளையார், முருகன், காளி ஆகிய பழந்தமிழ்த் தெய்வங்களின் உருவ அமைப்புக்களுள்ளும் இதே உண்மை வலியுறுத்திக் கூறப்படுவது உற்று நோக்கத் தக்கது. (இத் தெய்வங்களின் முகங்கள் ஐந்து, ஆறு என மாறியவிடத்துங்கூட இம் மூன்றாவது கண் அல்லது நெற்றிக்கண் இன்றியமையாயது வேண்டப்படுவது காண்க.)

இக் கண்ணின் இயல்பை நோக்க இவ் வியைபு இன்னும் நுட்பமானது என்பது காணலாம். ஐம்புலன்களிலும் சிறப்புடையது கண் ஆதலின், இவ்வுறுப்பு நெற்றிக்கண் என்று பெயர் கொண்டதாயினும், உண்மையில் இது கண்ணோ, அல்லது ஐம்புலன்களுள் ஒன்றோ அன்று; அவ் வைம்புலன்களையும் உள்ளடக்கி, அவற்றிற்கும் அப்பாற்பட்ட ஓர் ஆறாம் அறிவின்பாற்பட்டது. (தொல்காப்பியர் இத்தகைய ஆறாம் அறிவு தெய்வப் பிறவிக்கேயன்றி மக்கட் பிறவிக்கும் இன்றியமையாப் பண்பாகக் கூறினார்.)

இவ்வறிவைப் பற்றிய கருத்துத் தமிழரிடை வெறுங் கட்டுக்கதையோ புனைந்துரையோ அன்று. அடிப்படையான இன்றியமையாத பழைய உண்மையே என்பது அதற்கெனத் தமிழில் வேறெம் மொழியிலும் இல்லாத ஒரு தனிப்பட்ட நுண்கருத்துடைய சொல் இருப்பதனால் அறியலாம். "அதுவே, 'உ' என்ற மூன்றாம் கட்டு ஆகும். இஃது இம்மூன்றாம் கண்ணாற் காணப்படும் பொருள்களை - அஃதாவது பருப்பொருள்களுள் மற்ற இரு கண்களுக்கும் மறைந்தவற்றையும் (பின் உள்ளது, மேல் உள்ளது, தொலையிடத்தும் முக்காலத்தும் உள்ளது ஆகியவற்றையும்) நுண்பொருள்களையும் குறிப்பது என்பது யாவரும் அறிந்ததே.

இரண்டாவதாக, இறந்தவரை உடலழியாமல் தாழியில் அடக்கிவைப்பது இலெமூரியர், எகிப்தியர் தமிழர் ஆகிய மூவர்க்கு மட்டுமே சிறப்பான பண்பாம்.இஃதன்றி, இலெமூரியரிடை வழங்கிய உடலினின்று உயிரைப் பிரிக்கும் முறையையும், உடலை நீண்டநாள் கெடாது வைத்திருக்கும் முறையையும் நோக்குவோர் தமிழரிடை வழக்காற்றிலிருந்த 'வடக்கிருத்தலையும்' சித்தர் காயகற்ப முறையையும் எண்ணாதிருக்க முடியாது.

இலெமூரியரிடையேயும், தமிழரிடையேயும் பெண்கள் அடைந்திருந்த உயர்வு அதனைப் பற்றிப் பறைசாற்றி வரும் இந்நாளைய மேல்நாட்டினரிடையேகூட இல்லை எனல் மிகையாகாது. (தமிழ் நாட்டில் பெண்கள் ஔவையார் முதலிய தனிப்பெரும் புலவராகவும், மங்கையர்க்கரசி போன்ற அரசியல் தலைவராகவும், திலகவதியார், சூடிக்கொடுத்த நாச்சியார், முதலியோர் போன்ற சமயத் தலைவராகவும் இருந்தனர்.)

இவ் வகையில் இன்னொரு சுவை தரும் பொது உண்மை உளது. உலகின் மற்றெல்லா வகை மக்களிடையேயும் உலகின் முழுமுதற் பொருள் ஆண்பாற் சார்புடையதாகவே கொள்ளப்பட்டிருக்க, மேற்கூறிய (இலெமூரியர், எகிப்தியர், தமிழர் ஆகிய) மூவரிடை மட்டும் அது பெண்பாற் பொருளாகத் தாயுருவிலும் வழிபடப்படுகிறது. சைவரிடை அம்முழுமுதற் பொருள் இன்னும் அம்மையப்பருருவில் இருபாலும் ஒருபாலாக வணங்கப்படுதல் காண்க.

இயற்கையை இலெமூரியர் இக்காலத்தவரை விடப் பன்மடங்கு மிகுதியாக அறிந்திருந்தும் அதனைத் தந்நலத்திற்காகவோ உலக அழிவிற்காகாவோ பயன்படுத்தாமல் ஆக்கமுறையிற் பொது நலத்திற்காக மட்டுமே பயன்படுத்தியதை ஒருபுறமும், கிட்டத்தட்ட அதே முறையில் அமைந்துள்ள சித்தர் முறையை மற்றொரு புறமும் ஒப்பிட்டு நோக்குபவர்க்கு அவ்விலெமூரியரில் மீந்து நின்றவரே சித்தராயினரோ என்ற ஐயம் எழாதிராது.

இன்னொரு சுவை தரும் பொதுமைப் பண்பு இலெமூரியரிடையவும், இன்றுவரை பழந்தமிழரான மலையாளத்தாரிடையும், கிழக்கிந்தியத் தீவுகள், பலித்தீவுகள் முதலியவற்றிலுள்ள மக்களிடையும் காணப்படும் தாய்வழி உரிமையாம். இன்றும் இவ்வுரிமையைக் குறிக்கும் தாயம் என்ற பழந்தமிழ்ச் சொல் வடமொழிச் சட்ட நூல்வரை சென்று 'தாய பாகம்' என வழங்குதல் காண்க.

இன்னும் வாழ்க்கை அமைதி, சமயக் கொள்கை, கோயிலமைப்பு, ஒழுக்கநிலை முதலிய பலவகைகளிலும் கூடப் பழந்தமிழர் இலெமூரியரையும், எகிப்தியரையும், அமெரிக்கமய நாகரிக மக்களையும் பல நுண்ணிய செய்திகளில் ஒத்திருக்கின்றமை காணலாம். தமிழ்ச் சித்தர் நூல்களை நுணுகி ஆய்வோர்க்கு இன்னும் பலப்பல ஒப்புமைகள் புலப்படக்கூடும் என்றும் நாம் நம்புகிறோம்.

இலெமூரியாவின் கல்வெட்டுக்களிலும், வட இந்தியாவில் சிந்து ஆற்றுப் பக்கமுள்ள கல்வெட்டுக்களிலும் காணப்படும் எழுத்துக்கள் மொழிகள் முதலியவை தெளிவுபெறப் பொருள் கொள்ளப்பட்டால் தமிழரைப் பற்றிய பல புதைப்பட்ட உண்மைகள் விளங்கலாம். தமிழர் முன்னேற்றத்திற்கு இஃது ஒரு முதற்படியாக உதவும்.

No comments: