Sunday, December 30, 2007

இலெமூரிய மக்களது நாகரிகம்

மேலே நாம் குறிப்பிட்டபடி, இலெமூரியர்களே முதல் மனிதர்கள் என்ற தப்பெண்ணத்தின் பயனாகவேதான் இப்பழ்ங்கண்டத்திற்கு அறிஞர் முதலில் இலெமூரியா என்ற பெயரைக் கொடுத்தனர். மனித வகுப்பின் முன்மாதிரி எனக் கருதப்பட்ட இலெமூர்களின் உறைவிடம் என்பது இதன் பொருள். இக்கருத்துப் பிழைபாடுடையதென்றும் அந்நாளைய மக்களின் ஏடுகளில் இந்நாடு "மூ"வின் "தாய் நிலம்" என்று வழங்கி வந்ததென்றும் ஆசிரியர் கார்வே கூறுகிறார்.

இலெமூரிய மக்கள் தற்கால மக்களைவிடப் பெரிதும் நெட்டையானவர்களே. ஆறடிக்கு மேற்பட்டு ஏழடி வரையிலும் அவர்கள் உயர்ந்திருந்தனர். அவர்கள் உடலின் எடை 160 கல் முதல் 200 கல் வரை என்று கூறப்படுகிறது.

அவர்களுடைய கைகள் இன்றைய மனிதனின் கைகளைவிட நீண்டவையாகவும், பெரியவையாகவும், சதைப்பற்று மிக்கவையாயும் இருந்தன. கால்கள் இதற்கொத்து நீட்சிபெறாமல் திரட்சியுடையவையாய் இருந்தன.

தலை உச்சியில் மயிர் இயற்கையாகவே கட்டையாக இருந்தது. ஆனால், பின்புறம் நீண்டு வளர்ந்து பலவகையாக அழகுபெற முடிக்கப்பெற்றிருந்தௌ. மயிர்கள் மென்மையும் பொன்மையும் வாய்ந்தவை.

கல்லில் செதுக்கப்பட்ட சிலைகளினாலும், தோலில் தீட்டப்பெற்ற ஓவியங்களினாலும் அவர்கள் மிகுதியாக அணிகலன் அணியவில்லை என்றும், தலைமுடியைப் பின்னி முடிப்பதையே பேரணியாகக் கொண்டனர் என்றும், அவ்வோர் அணியிலேதான் அவர்கள் தம் பலவகைப்பட்ட திறங்களையும் திருந்தக் காட்டினர் என்றும் அறிகிறோம்.

அவர்கள் உருண்டு நீண்ட கழுத்துடையவர்கள். சிறுமணிகளாலாகிய மாலை ஒன்றையே அவர்கள் கழுத்தணியாகக் கொண்டார்கள். காலடிகளும், கைகளும், அங்கைகளும் மிகப் பரந்திருந்ததோடு விரல்களின் எல்லாக் கணுக்களும் தடையின்றி அசையக் கூடியனவையாயிருந்தபடியால் அவர்கள் தற்கால மனிதரைவிட மிக நுண்ணிய வேலைத் திறனுடையவராயிருந்தனர்.

பெண்கள் ஆடவரைவிட உயரத்தில் சற்றுக் குறைந்தும், பருமனில் சற்றுக் கூடியும் இருந்தனர். ஆடவரைவிட அவர்கள் உருவம் வனப்புடையதாயிருந்தது என்பது எதிர்பார்க்கத்தக்கதே.

ஆடவர் முகம் பெண்டிர் முகம் போன்றே மயிர் அற்றதாய் இருந்தது. ஆனால், பெண்கள் ஒருவகை நாரினால் செய்த முகமூடி அணிந்திருந்தனர். இதன் மூலம் வெயிலின் சூடு அவர்கள் முகத்தை வாட்டாமலும், காற்று மட்டும் எளிதில் புகும்படியும் இருந்ததனால் ஆடவ்ர்களைவிட அவர்கள் முகங்கள் பொன் நிறமிக்கவையாயிருந்தன.

அவர்கள் காதுகள் இன்றைய மக்களின் காதுகளைவிடச் சிறியவையாயிருந்தன. மூக்கு மிகவும் சப்பையாகவும் பெரிதாகவும் இருந்தது. கண்கள் பெரியவை; தெளிவையும் கூர் அறிவையும் காட்டுபவை.

பொதுப்பட அவர்கள் செம்பு அல்லது பொன் நிறமுடையவர்கள். கண்கள் தவிட்டு நிறமும் மயிர் கருமை நிறமும் உடையன. பற்கள் சிறியவையாய் முத்துப்போல் ஒரே படியினவாய் வெண்மையாய் விளங்கின.

No comments: